DETAILS ABOUT MISSING MALAYSIA AIRLINES PLANE - BOEING 777-200 - IN TAMIL - Anna University Multiple Choice Questions

DETAILS ABOUT MISSING MALAYSIA AIRLINES PLANE - BOEING 777-200 - IN TAMIL

கடந்த சனிக்கிழமை (8ஆம் தேதி) அதிகாலை 12.40 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 777-200 விமானம் MH370 கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்குக்கு புறப்பட்டது. ஆனால், 1.30 மணி அளவில் தெற்கு சீன கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எவ்வித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பாமல் ரேடார்களில் இருந்து மாயமானது. விமானிகள் எந்தவித அபாய சமிக்ஞைகளையும் அனுப்பவில்லை.

boeing 777-200 emirates
boeing 777-200 emirates
ரேடாரில் இருந்து மாயமாவதற்கு சில நொடிகளுக்கு முன் விமானம் தனது பாதையில் இருந்து கோலாலம்பூருக்குத் திரும்பியிருக்கிறது. ஆனால், விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு எந்தவிதத் தகவல்களையும் தெரிவிக்கவில்லை. இது ஏன் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. கடைசியாக மலேசிய விமானம் MH370 சிவில் ரேடாரில் இருந்து மாயமான போது இருந்த இடம் இதுதான் - 065515 வடக்கு (நில நிரைக்கோடு) and 1033443 கிழக்கு ( நில நேர்க்கோடு ).

நடப்பது என்ன? 

விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா? நடுவானிலேயே வெடித்துச் சிதறியதா? கடலில் விழுந்ததா? தொழில்நுட்பக் கோளாறா? 

இந்தக் கேள்விகளுக்கு இதுவரை விடை கண்டுபிடிக்கப்படவில்லை. தீவிரமாக கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமாகத் தேடப்பட்டாலும் விமானத்தின் எந்த ஒரு சிறு பாகம் கூட இப்போது வரை கடலிலோ, தரையிலோ கண்டெடுக்கப்படவில்லை. 
boeing 777-200 emirates
boeing 777-200 emirates
விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் பாதையில் இருந்து மாறி சென்றிருப்பதால் தேடும் இடத்தின் பரப்பளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும், மலேசியாவுக்கும் நடுவில் உள்ள மலாக்கா ஜலசந்தியின் வடக்குப் பகுதியில் தேடப்படுகிறது. இந்த இடம் விமானம் கடைசியாகப் பறந்த இடத்தைவிட மேற்கில் உள்ளது. ஏன் சம்பந்தம் இல்லாமல் இங்கு தேடுகிறீர்கள்? என்று மலேசிய சிவில் ஏவியேஷன் துறைத் தலைவர் அசாரூதீன் அப்துல் ரகுமானிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "சில விஷயங்களை மட்டுமே உங்களிடம் சொல்ல முடியும். சில விஷயங்களை என்னால் உங்களிடம் சொல்ல இயலாது" என்றார்.

அப்டேட்: மலேசியாவைச் சேர்ந்த பெரிதா ஹரியன் நாளிதழுக்கு விமானப் படைத்தளபதி ராட்சலி தவுத் அளித்த பேட்டியில், மிலிட்டரியின் ரேடாரில் நள்ளிரவு 2.40 மணிக்கு MH370 விமானம் மலாக்கா ஜலசந்தியின் வடபகுதியில் இருக்கும் புலாவ் பெராக் தீவின் அருகே கடைசியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். சிவிலியன் ரேடாரில் இறுதியாக பதிவான இடத்துக்கும் மிலிட்டரி ரேடாரில் பதிவான இந்த இடத்துக்கும் கிட்டத்தட்ட 300 கி.மீ. வித்தியாசம் . மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் வழிமாறிய விமானம், அதன்பின் தாழ்வாகப் பறந்து மலாக்கா ஜலசந்தியை நோக்கித் திரும்பியது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால்,இந்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை என மலேசிய அதிகாரிகள் இன்று மறுத்துள்ளனர்.

இந்நிலையில், மலேசிய விமானத்தை தேடும் பணி அந்தமான் வரை விரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக இந்தியா உதவ வேண்டும் எனவும் மலேசிய அதிகாரிகள் இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தில் இருந்த பயணிகள் பற்றிய தகவல்: 

1. சீனா/தாய்வான் - 152 + 1 குழந்தை
2. மலேசியா - 38
3. இந்தோனேசியா - 7 
4. ஆஸ்திரேலியா - 6
5. இந்தியா - 5
6. அமெரிக்கா - 3 + 1 குழந்தை
7. ஃப்ரான்ஸ் - 4 
8. கனடா - 2
9. நியூசிலாந்து - 2 
10. உக்ரைன் - 2
11. இத்தாலி - 1
12. நெதர்லாந்து - 1
13. ஆஸ்திரியா - 1 
14. ரஷ்யா - 1

தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகள்:

இப்போதைய நிலவரப்படி 10 நாடுகள் தெற்கு சீன கடல் பகுதியில் (South China Sea) விமானத்தைத் தேடி வருகின்றன. மலேசியா இந்தத் தேடுதல் பணியை முன்னின்று நடத்துகிறது. சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மலேசியாவுடன் இணைந்து தேடுகின்றன. 

மலேசியா - 14 கடற்படைக் கப்பல்கள் + 13 கோஸ்ட் கார்டு படகுகள் + 16 விமானங்கள்
வியட்நாம் - 8 கப்பல்கள் + 7 விமானங்கள்
சிங்கப்பூர் - 2 போர்க்கப்பல்கள் + 1 நீர்மூழ்கி உதவிக் கப்பல் + 1 சிகோர்ஸ்கி கடற்படை ஹெலிகாப்டர் + 1 C-130 விமானம்
ஆஸ்திரேலியா - 2 P-3C விமானங்கள் + 2 விமானப்படை கண்காணிப்பு விமானங்கள்
தாய்லாந்து - சூப்பர் லினக்ஸ் கடற்படைக் கப்பல் + 1 ரோந்துக் கப்பல்
ஃபிலிப்பைன்ஸ் - 1 ஃபோக்கர் F-27 விமானம் + 1 ஐலாண்டர் விமானம் + 2 ரோந்துக் கப்பல்கள் 
இந்தோனேசியா - 4 அதிவிரைவு ரோந்துக் கப்பல்கள் + 1 கடல்பகுதி ரோந்து விமானம் 
சீனா - 9 போர்க்கப்பல் + 1 பீரங்கிக் கப்பல் + 1 லேண்டிங் கிராஃப்ட் கப்பல் + 1 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல் + 1 கமாண்டோ கேரியர் வகை கப்பல் + 50 கடற்படை வீரர்கள்
அமெரிக்கா - தெற்கு சீன கடல் பகுதியில் ஏற்கனவே பயிற்சியில் இருந்த 2 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்கள் + 2 MH60 சீஹாக் ஹெலிகாப்டர்கள் 

மேலும், அமெரிக்காவில் இருந்து NTSB (National Transportation Security Board) வல்லுனர்களும், போயிங் விமான நிறுவனத்தின் வல்லுனர்களும், FAA (Federal Aviation Administration) நிபுணர்களும் கோலாலம்பூருக்கு விரைந்திருக்கின்றனர். சீனா தன்னிடம் இருக்கும் 10 ஹை-ரெசல்யூஷன் சேட்டிலைட்டுகளை இந்த தேடுதல் பணிக்காக திருப்பிவிட்டிருக்கிறது,

தேடுதல் பணி - எண்ணெய் படலமும், கடல் கேபிளும்!

தேடுதல் பணியின்போது கடலில் எண்ணெய்ப் படலங்கள் மிதந்துகொண்டிருந்ததைப் பார்த்த தேடுதல் குழுவினர், அதை ஆராய்ச்சி செய்ததில் அது விமானத்தின் எரிபொருள் அல்ல என்று தெரிவித்துள்ளனர். வியட்நாம் விமானப் படையினர் தேடும்போது விமானத்தின் கதவு போன்ற ஒரு பாகம் கடலில் மிதப்பதைப் பார்த்திருந்திருக்கின்றனர், ஆனால், அது கடலில் செல்லும் கேபிளின் கேப் என்று தெரியவந்துள்ளதாக மலேசிய சிவில் ஏவியேஷன் துறையின் இயக்குனர் அசாரூதீன் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். எனவே, இப்போதைய நிலவரப்படி விமானத்தின் ஒரு பாகம்கூட கிடைக்கவில்லை என்பதே உண்மை. 

மாயமான விமானத்தின் பைலட்டுக்கு ஆதரவு குவிகிறது!

ஜஹாரி அஹமத் ஷாஹ்
ஜஹாரி அஹமத் ஷாஹ் 
மாயமான மலேசிய விமானத்தின் கேப்டன் பைலட்டின் பெயர் ஜஹாரி அஹமத் ஷாஹ். 33 வருடங்களாக பைலட்டாக இருக்கும் இவருக்கு 53 வயது ஆகிறது. மொத்தம் 18,365 மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். விமானம் ஓட்டுவதை தொழிலாகப் பார்க்காமல் விருப்பத்தின் பெயரால் செய்தவராம். தற்போது தான் இயக்கிய போயிங் 777 விமானத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்ட இவர், வீட்டில் அதே விமானத்தின் சிமுலேட்டரை அமைத்து, அதில் பயிற்சி பெற்று வந்தார் என்கின்றனர் அவருடன் வேலை பார்த்தவர்கள். 

சிமுலேட்டர் பயிற்சி பெறும் மற்ற விமானிகளுக்கு பரீட்சை வைக்க, மலேசிய சிவில் ஏவியேஷன் துறையினால் ஜஹாரி அஹமத் ஷாஹ் அங்கீகரிக்கப்பட்டவர் என மலேசியன் ஏர்லைன்ஸில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். 

33 வருடங்களாக மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றும் இவர் ஃபோக்கர் F50, ஏர்பஸ் A300 மற்றும் போயிங் 737 போன்ற பலதரப்பட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். 

மலேசிய விமானம் மாயமானதற்கு விமானிகளின் தவறு காரணமாக இருக்கவே வாய்ப்பில்லை என்று விமானிகளிடம் தொடர்பில் இருந்தவர்கள் கூறுகின்றனர். 

தீவிரவாதிகளின் சதியா? 

தீவிரவாதிகள் இந்த விமானத்தைக் கடத்தியிருக்கவோ அல்லது மூழ்கடித்திருக்கவோ கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இதில் ஒரு பாஸ்போர்ட் இத்தாலியையும், இன்னொரு பாஸ்போர்ட் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்களுடையது ஆகும். இந்த பாஸ்போர்ட்டுகளில் பயணித்தவர்களுடைய விமான டிக்கெட், வியாழக்கிழமை தாய்லாந்தில் வாங்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டிக்கெட் பீஜிங் வழியாக ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்ஃபர்ட்-க்கும், இன்னொரு டிக்கெட் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பாஸ்போர்ட்டுகளுடைய உண்மையான உரிமையாளர்கள் விமானத்தில் பயணிக்கவில்லை. இத்தாலியைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2012ஆம் ஆண்டிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2013ஆம் ஆண்டிலும் தாய்லாந்தில் திருடப்பட்டுள்ளது. இந்த இருபாஸ்போர்ட்டுகளுமே இன்டர்போலின் டேட்டாபேஸில் இருக்கிறது. எப்படி போலி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஒரு பன்னாட்டு விமானத்தில் ஏறமுடிந்தது என இன்டர்போல் கேள்வி எழுப்பியுள்ளது.

Unknown
Unknown

திருடப்பட்டுள்ள பாஸ்போர்ட்டில் பயணித்த ஒருவர் ஈரானைச் சேர்ந்த Pouria Nour Mohammad Mehrdad என்ற 19 வயது வாலிபர். இவருடைய தாயார் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் மகனுக்காக காத்திருந்திருக்கிறார். அவரிடம் விசாரித்ததை வைத்து இந்த ஈரானியர் எந்த தீவிரவாதக் குழுவையும் சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், புகலிடம் தேடித்தான் அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் பயணித்தார் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு போலி பாஸ்போர்ட்டின் உண்மையான உரிமையாளர் Christian Kozel என்ற ஆஸ்திரியர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார். எனவே போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இருவரும் புகலிடம் தேடியே ஐரோப்பாவுக்கு பயணித்தது உறுதியாகியுள்ளது. 

மேலும், தீவிரவாதச் செயலுக்கான எந்தவிதமான தடயங்களும், ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை!

போயிங் 777-200 - உலகின் மிக பாதுகாப்பான விமானங்களுள் ஒன்றா?!

காணாமல் போன MH370 போயிங் 777-200 விமானத்தில் கடைசியாக ஃபிப்ரவரி 23ஆம் தேதி வழக்கமான பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது விமானத்தில் எந்தவித கோளாறும் காணப்படவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் க்ரூப்பின் சி.இ.ஓ அஹமத் ஜௌஹரி யாயா தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தை வாங்கியுள்ளதாகவும், இதுவரை 53,465.21 மணி நேரங்கள் பறந்திருக்கிறதாகவும் அவர் கூறியுள்ளார். 

போயிங் 777-200 விமானம் சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான விமானம் என தகவல்கள் கூறுகின்றன. கடைசியாக 2013ஆம் வருடம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுதளத்தின் அருகே விபத்துக்குள்ளாகி 3 பேர் இறந்தது மட்டுமே இதுவரை போயிங் 777 ரக விமானத்தில் ஏற்பட்ட பெரிய விபத்து ஆகும்!

தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்தாகச் சொல்லும் இருவர்!

இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த இருவர் வழக்கத்தைவிட வேறு ஒரு வழியில், வானத்தில் தாழ்வாகப் பறந்த விமானம் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். 

மலேசியாவின் கெடெரே (Ketereh) பகுதில் வசிக்கும் அலிஃப் ஃபாதி அப்துல் ஹதி என்ற ஒருவர் நள்ளிரவு 1.45 மணி அளவில் தன் வீட்டில் இருந்து விமானங்கள் மேலே எழும்பும்போதும், தரையிறங்கும்போதும் ஒளிரவிட்டு இருக்கும் பளீரென்ற வெளிச்சம் ஒன்றைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உயரம் குறைந்து வந்ததாகவும், வழக்கத்தைவிட மாறுவழியில் 'பச்சோக்' என்ற கடலை ஒட்டிய பகுதியை நோக்கி அந்த வெளிச்சம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது எதுவும் தோன்றவில்லை எனவும், மாயமான விமானத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன், போலீசிடம் இதைப் பற்றிக் கூற முடிவெடுத்ததாகவும் கூறியிருக்கிறார். 

இவர் இருக்கும் பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் குயாலா பேசுட் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆசித் இப்ராகிம் என்ற 55 வயது மீனவர் ஒருவரும் இரவு 1.30 மணி அளவில் ஒரு தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்தாராம். வழக்கமாக விமான விளக்குகளின் வெளிச்சம் தொலைவில் உள்ள நட்சத்திரத்தைப் போலத்தான் இருக்கும். ஆனால், தான் பார்த்த வெளிச்சம் பளீரென்று இருந்ததாகவும், மேகங்களுக்குக் கீழ் தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இவர்கள் சொல்வது MH370 விமானத்தைத்தானா என்பது விரைவில் தெரிந்துவிடும்!
Unknown
Unknown
விலகாத மர்மங்கள் - பதில் இல்லாத கேள்விகள்!

1. விமானத்தில் பயணித்த சில பயணிகளின் செல்ஃபோன் நேற்று வரை தொடர்ந்து ஒலித்தது குழப்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு பயணியின் QQ அக்கவுன்ட் (சீன சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளம் ) திங்கள்கிழமை மதியம் வரை 'ஆக்டிவ்'-ல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. விமானத்தில் இருந்த 19 சீனப் பயணிகளின் குடும்பங்கள் தாங்கள் விமானத்தில் பயணித்தவர்களுக்கு அலைபேசியில் அழைத்ததாகவும், ரிங்-டோன் வந்தாலும், அழைப்பை யாரும் ஏற்கவில்லை எனவும் எழுதிக்கொடுத்திருக்கின்றனர். 

ஆனால், பீஜிங்கில் இருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸின் பிரதிநிதி இக்னேஷியஸ் ஆங், தான் ஒரு பயணியின் தொலைபேசிக்கு ஐந்து முறை அழைத்தாகவும், ரிங்-டோன் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

2. மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் ஏன் விமானம் வழிமாறிச் சென்றது? 

3. விமானத்தில் கோளாறு என்றால் ஏன் விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கவில்லை?

4. விமானம் பாதை மாறியதை ஏன் மலேசியன் ஏர்லைன்ஸுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிகள் தெரிவிக்கவில்லை?

5. ஏன் விமானத்தில் இருந்து வரவேண்டிய அபாய சமிக்ஞை (Distress Signal) இதுவரை கிடைக்கவில்லை? 

6. கடலிலோ/தரையிலோ விழுந்திருந்தால் விமானத்தின் பிளாக்பாக்ஸ் தொடர்ந்து அனுப்பும் சமிக்ஞைகள் இதுவரை பெறப்படவில்லை. 

7. எப்படி சில பயணிகளின் அலைபேசி திங்கள்கிழமை மதியம் வரை இயக்கத்தில் இருந்தது? அதன்பின் எப்படி இயக்கம் நின்றது?

என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இதற்குமுன் இதேபோன்ற ஒரு சம்பவம் உலக வரலாற்றில் நடந்துள்ளது. 2009ஆம் வருடம் ஜூன் மாதம் ஏர் ஃப்ரான்ஸ் விமானம் (எண்:447) ஒன்று ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸுக்குச் சென்றது. ஏர்பஸ் A300 ரக விமானமான இது கடலின் மேல் ரேடார்களின் கண்காணிப்புப் பகுதிக்கு அப்பால் பறக்கும்போது காணாமல்போனது. 6 மணிநேரங்களுக்குப் பிறகுதான் ஃப்ரான்ஸ் நாடால் இதை ஏற்றுக்கொள்ளவே முடிந்தது. ஏர்பஸ் A300 ரக விமானமும் பாதுகாப்பான விமானம்தான். இந்த விமானமும் அபாய சமிக்ஞை (Distress Signal) அனுப்பவில்லை. 17,000 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த விமானத்திற்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த விமானத்தின் பாகங்கள் ஐந்து நாள்கள் கழித்து பிரேசிலுக்கும் ஆஃப்ரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் இருந்து எடுக்கப்பட்டது. ஆனால், இந்த விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் 2 வருடங்கள் கழித்து கடலுக்கு அடியில் அதிக ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மொத்தம் 3 வருடங்கள் கழித்துதான் அந்த விமானம் கடலில் விழுந்ததற்கான மர்மம் விலகியது!

மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் கிடைக்கும் வரை இந்த கேள்விகளுக்கு விடை தெரிய வாய்ப்பில்லை!

Thanks - http://news.vikatan.com/

No comments:

Post a Comment